ட்ராய் (TRAI) எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2005ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதன்படி, திருத்தப்பட்ட மொத்த வருவாய் (adjusted gross revenue) அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தப் புதிய விதிமுறைகளின்படி மொத்த வருவாயில் மொபைல் ஃபோன் விற்பனையில் ஈட்டப்படும் வருவாய், டிவிடெண்ட் எனப்படும் பங்கு ஆதாயம், வாடகை உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வருவாயையும் கணக்கில் கொண்டு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதனை எதிர்த்து பாரத் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குத் தரவேண்டிய ரூ.1.42 லட்சம் கோடி நிலுவைப் பணத்தைக் கட்ட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.