மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் கேரளா அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஆளுநரின் ஒப்புதலின்றி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்பது குறித்து நான் ஆராயவுள்ளேன். ஒப்புதல் பெறாவிட்டாலும் குறைந்தபட்சம் என்னிடம் தகவல் தெரிவித்திருக்கலாம்.
நீதித்துறையை ஒருவர் நாடுவது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாநில அரசியலமைப்பின் தலைவர் நான்.என்னிடம் இதுகுறித்து ஆலோசித்திருக்கலாம். நானே இதை செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்" என்றார்.