தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண், மெஹபூப் நகர் மாவட்டம் கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் அவர், இரவு பணி முடித்து வழக்கம் போல, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷாத்நகர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் டயர் பஞ்சராகியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த அவர், தனது தங்கைக்கு ஃபோன் செய்து, தனது வண்டி பஞ்சராகியதாகவும், அதனை ஒரு லாரி ஓட்டுநர் சரிசெய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இருக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியான சிலர் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தங்கை அவரிடம், அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, அவரது தங்கை அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கவே, அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்காததால், விஷயத்தை பெற்றோரிடம் அவரது தங்கை தெரிவித்துள்ளார். உடனடியாக, காவல் நிலையத்தை அணுகிய அவர்கள், தன் மகளைக் காணவில்லை என்று புகாரளித்தனர்.
மகளைக் காணாமல் அவரது பெற்றோர் தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே அடையாளம் தெரியாத பெண் சடலம், எரிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அவ்வழியே சென்ற பால்காரர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றினர்.
மேலும், மகளை காணவில்லை என்று பெண் மருத்துவரின் குடும்பத்தார் அளித்திருந்த புகார் ஷாத்நகர் காவல் துறையினருக்குத் தெரியவந்த பின், அவரின் தங்கையை அழைத்துச் சென்று எரிந்த நிலையிலிருந்த உடலைக் காண்பித்துள்ளனர்.