சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரி (37) கடந்த செவ்வாய்க்கிழமை பிரவீன் குமார் என்பவர், தனக்கு பணம் தருவாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என ஹைதராபாத்திலுள்ள பஞ்சகுட்டா காவல் நிலையில் புகாரளித்தார். பின்னர் காவல் நிலையம் முன்பே தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்த காவல் துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் புதன்கிழமை உயிரிழந்தார். லோகேஸ்வரி இறந்ததைத் தொடர்ந்து, பிரவீன் குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அந்தப் பெண் தனது கணவர் இறந்த பின் பிரவீன் குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் பணியாற்றும் பிரவீன் குமார் என்ற ஊழியருடன் 2012ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கமாகி, பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். இதையடுத்து பிரவீன் அவர் வேலை செய்யும் அதே நகைக் கடையில் லோகேஸ்வரிக்கும் வேலை வாங்கித் தந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு தங்க ஆபரணங்களைத் திருடியதாக லோகேஸ்வரி மீது காவல் நிலையில் பிரவீன் புகாரளித்துள்ளார்.