அமெரிக்காவைச் சேர்ந்த மனை வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசாலே (ஜே.எல்.எல்.-JLL) ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஆற்றல்மிகு நகரங்கள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
இந்த ஆய்வுக்காக உலகின் 130 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அந்த நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆய்வு பட்டியலை தெலங்கானா தகவல்தொடர்பு அமைச்சர் கே.டி. ராமா ராவ் வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் பெங்களுருவுக்கு இரண்டாம் இடமும், சென்னைக்கு ஐந்தாம் இடமும், டெல்லிக்கு ஆறாம் இடமும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பத்து இடங்களில் நான்கு இந்திய நகரங்கள் உள்ளன.
இதில் மூன்று நகரங்கள் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. மற்ற இந்திய நகரங்களான புனே, கொல்கத்தா, மும்பை முறையே 12, 16, 20 ஆகிய இடங்கள் வகிக்கின்றன. பரந்து விரிந்த தொழில்நுட்பம் காரணமாக இளைஞர்களை இழுக்கும் காந்தமாக ஹைதராபாத், பெங்களுரு ஆகிய நகரங்கள் திகழ்கின்றன என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கே.டி. ராமா ராவ், “ஹைதராபாத் முதலிடம் பெறுவது மட்டுமல்லாமல், கண்டுபிடிப்பு, பொருளாதார வளர்ச்சியில் தென்சீன நகரான ஷென்ஜென், ஷாங்காய் ஆகியவற்றுடன் போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் தெலங்கானா 2014ஆம் ஆண்டில் மாநிலத் தகுதியை அடைந்தபோது பட்டியலில் இடம்பெறவில்லை. தெலங்கானா மாநிலம் உருவானபோது ஹைதராபாத் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் ஹைதராபாத் 2015ஆம் ஆண்டு பட்டியலில் 20ஆவது இடங்களுக்குள் நுழைந்தது.
இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்துக்கும், 2017ஆம் ஆண்டு மூன்றாவது இடத்துக்கும் உயர்ந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முதலிடமும், 2019ஆம் ஆண்டு இரண்டாம் இடமும் பெற்றது. தற்போது மீண்டு(ம்) முதலிடத்துக்கு வந்துள்ளது” என்றார்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரு கடந்தாண்டு (2019) முதலிடம் பிடித்திருந்தது. நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலிலும் முதல் பத்து ஆற்றல்மிகு நகரங்கள் பட்டியலில் தென்னிந்திய நகரங்கள் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!