இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய மார்ச் மாதத்தில், டெல்லியில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த மாநாடுகள் உள்ளிட்டவற்றை நடத்த அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. இதனை மீறி மார்ச் மாதத்தில் சமய மாநாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு கரோனா தொற்று வேகமாக பரவ காரணமாக அமைந்தது. இதன் காரணமாக இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர்கள், அதன் நிர்வாகிகள் ஆகியோர் மீது டெல்லி காவல் துறையினர் சார்பில் மார்ச் 31ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 34 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
சமய மாநாடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டினர் 197 பேர், இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அலுவலர்களிடம் தங்களது பாஸ்போர்ட்களை சமர்ப்பிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் "தங்கள் பாஸ்போர்ட்களை இழந்துவிட்டதாக" அலுவலர்களிடம் தெரிவித்ததாகவும், ஆனால் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.