மாணவர்களிடம் எழும் புதிய சிந்தனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதம மந்திரியின் துருவ் புதியவழிக் கற்றல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருவ் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே. விஜய் ராகவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்த துருவ் திட்டத்தின் மூலம் இளம் மாணவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த முடியும். மேலும் அந்த திறமைமிக்க மாணவர்கள் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான பொருளாதார, அரசியல் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வு பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.