பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று புதுச்சேரியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. முதல் ஐந்தாண்டுகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகால திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 184 நாடுகள் கரோனா தொற்றால் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்தில் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரச்னை உள்ளது போன்று எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.எப்படியாவது இந்த நாட்டில் மக்களுடைய போராட்டத்தை தூண்டி விட வேண்டும் என்பதற்காக சோனியா காந்தி உள்ளிட்டோர் துணை செல்கின்றனர். ரயில், பேருந்து மூலம் குடிபெயர் தொழிலாளர்களை கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அதுவரை தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.
120 நாடுகளுக்கு மருத்துவ உதவி செய்துள்ளோம். இந்தியாவில் பெரிய அளவில் கரோனா பாதிப்பு இல்லை. இதனை சமாளிக்கக் கூடிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். வேலை இழப்பை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
மின் திருட்டை தடுப்பதற்காகவே மின் விநியோகம் தனியார் மயம் ஆக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் மின் இணைப்பிலிருந்து சிலர் வர்த்தகத்துக்கு பயன்படுத்திவருகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவேதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மீட்டர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. உடனே இலவச மின்சாரத்தை மத்திய அரசு நிறுத்தப்போகிறது எனக் கூறுகின்றனர்.
குஜராத்தில் இலவச மின்சாரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிறது. மாநில அரசு மானியம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த முடியாது. புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசு வழங்குகின்ற மானியத்தை எந்த சக்தியாலும் நிறுத்தமுடியாது மத்திய அரசும் அதனை நிறுத்த அனுமதிக்காது” என்றார்.