கோவிட்-19 பூட்டுதல் (லாக்டவுன்) என்பது அனைவருக்கும் கடினமான நேரம். அதிலும் குழந்தைகள், முதியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் சவாலானது. அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக அளவு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அனுபவிக்கின்றனர். சீனாவில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, “சுகாதாரப் பணியாளர்கள் பெருமளவு மன உளைச்சலை அனுபவிக்கிறார்கள்” என்று கூறுகிறது.
அதாவது கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏனெனில் அவர்கள் நோயாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக மனச்சோர்வு, பதற்றம், பீதி, எதிர்காலத்தைப் பற்றிய பயம், நம்பிக்கையற்ற தன்மை, உதவியற்ற நிலை, முன்பே இருக்கும் சுகாதார நிலைமைகள் மோசமடைதல், சமூக விலகல், சரியான நேரத்தில் சாப்பிடாதிருத்தல், இரவில் தூங்க இயலாமை போன்றவை மோசமான மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளாகும்.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய, நிச்சயமற்ற தன்மை, போதுமான சமூக பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதது, சுகாதாரப் பணியாளர்களின் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யலாம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, “சாதகமற்ற சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் சூழ்நிலை பாதிப்பு காரணமாக பல்வேறு மக்கள் மனநலப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்”.
ஆகையால் பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைக்கும் வளர்ச்சி திட்டங்கள், மனநல மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அவசியம். மருத்துவத் துறைகளில் உள்ள முதலாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஆகியவைகளை உறுதி செய்வது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். இதனால் மனநல பாதகமான விளைவுகள் தடுக்கப்படுகிறது.
மேலும் முதலாளிகள் ஊழியர்களிடம் அதிக பரிவுணர்வுடன் இருத்தல் வேண்டும். அதுவும் பூட்டுதல் (லாக் டவுன்) போன்ற நெருக்கடி காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பது முற்றிலும் அவசியம். குழந்தைகள், வயதானவர்களை கனிவுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெருக்கடிக் காலத்தில் உதவி கிடைக்கிறது என்ற செய்தி மக்களுக்கு சென்றடைய வேண்டும். உடல் தூரத்தை பராமரிப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒரு குடிமகனாக இந்த கடினமான நேரத்தில் வீட்டிலேயே தங்கி ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது நமது பொறுப்பு.
அதே நேரம் நமது செயல்பாடுகள் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களையும், கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் தாக்கப்பட்டவர்களையும் பாதிக்கக்கூடாது. அவர்களை கோவிட்-19 தொற்று நோயாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்க வேண்டாம்.