தண்ணீர் பற்றாக்குறையும் குடிநீரின் தரமும்தான் இப்போதைக்கு இந்தியாவில் மக்களை வாட்டிவதைக்கும் பேரிடர்களாக உள்ளன. நாட்டில் கங்கை, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவிரி போன்ற பல வற்றாத நதிகள் இருந்தாலும்கூட தேசிய அளவில் தண்ணீர் நெருக்கடியானது பரவலாகக் காணப்படுகிறது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் மற்றும் வேதிமக் கழிவுகளால், நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் மாசுபடுத்தப்படுவது கவலைக்குரியதாகும். இந்நிலையில் குழாய்த் தண்ணீரின் தரம் குறித்து நம்பகத்தன்மை இல்லாமல், குடிநீரை விலைக்கு வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள். அதாவது, அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும்கூட அதையே அவர்கள் நாடுகிறார்கள்.
சவ்வூடு பரவல் (Reverse Osmosis) மூலம் சுத்திகரிக்கப்படும் - சுருக்கமாக, ’சவ்வூடு தண்ணீர்’ விற்பனை மையங்கள், அளவுக்கதிகமான கேன்களை சந்தையில் இறக்கிவிட்டு, மக்களின் குடிநீர்த் தேவையையும் குழாய்த்தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான விருப்பமின்மையையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, சவ்வூடு தண்ணீர் வர்த்தகத்தை ஏற்படுத்திக்கொண்டன. இந்த மையங்கள், பெரும்பாலும் ஆரோக்கியமான நிலைமையில் நடத்தப்படுவதில்லை; மாசுகலந்த நீரையோ அல்லது குழாய்த் தண்ணீரையோதான் குடுவையிலிட்டு விளம்பரம்செய்து விற்கின்றன. இந்த மோசடிக்கு முடிவுகட்டும்விதமாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது சட்டவிரோத குடிநீர் ஆலைகள் தொடர்பாக அண்மையில் சீற்றத்தை வெளிப்படுத்தியது.
மைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் இது தொடர்பாக முக்கிய ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. சவ்வூடு தண்ணீர் ஆலைகளால் 60% அளவுக்காவது சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தரமுடியாதபோது, அவற்றை டிசம்பர் 31-க்குள் மூடாவிட்டால், உரிய அதிகாரிகளின் ஊதியத்தில் பிடித்தம்செய்யவேண்டும் என்பதுதான், அந்த ஆணை. மேலும், எந்தப் பகுதி தண்ணீரில், கரையக்கூடிய மொத்த உப்புகளின் அடர்த்தியானது லிட்டருக்கு 500 மி.கி.க்குக் குறைவாக இருக்கிறதோ அங்கு தண்ணீர் ஆலைகள் மூடப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடனே, சவ்வூடு தண்ணீர் ஆலைகள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இதற்குத் தடைகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட துறையுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்படவேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
எவ்வாறாக இருப்பினும், நம் அன்றாடத் தேவையிலிருந்து சவ்வூடு தண்ணீரை முற்றிலுமாக விலக்கிவைப்பது என்பது ஆகாத காரியம். அந்த அளவுக்கு மக்கள் சவ்வூடு தண்ணீரைச் சார்ந்து இருக்கப் பழகிவிட்டனர். ஏனென்றால், குழாய்த் தண்ணீரானது சில இடங்களில் மாசுகலந்தும் சில இடங்களில் ஆபத்தான புளூரைடு மற்றும் உலோகப் படிவுகள் கலந்து மோசமானநிலையிலும் பேராபத்து விளைவிப்பதாகவும் இருக்கிறது. காட்டாக, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரியில் குடிநீர், பாசன நீர் இரண்டுமே, வேதி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இறால்பண்ணைகள் வெளியேற்றும் கழிவுகள் ஆகியவற்றால் மாசடைந்துவிட்டது. இதனால், உவர் நீரானது மீன் வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதியில் சவ்வூடு பரவல் மூலம் நீரானது சுத்திகரிக்கப்படாததால் பயன்படுத்தமுடியாதபடி இருக்கிறது.
நம்பகமில்லாத குழாய்த் தண்ணீர்:
குடுவைகள், கலன்களில் தண்ணீரின் தோற்றத்தை வைத்து, அது தூய்மையானது என்பதற்கு உறுதிப்பாடு இல்லை. நீரில் உள்ள அல்கலைன் தன்மை, அமிலத்தன்மை, கன உலோகங்களின் செறிவு ஆகியவற்றை ஆய்வுகள் மூலமாகவே கண்டறியமுடியும்; சும்மா கண்ணால் பார்த்துமட்டுமே அதன் தரத்தைத் தீர்மானித்துவிடமுடியாது. ஆகையால், பொதுவான நுகர்வோரைப் பொறுத்தவரையில், இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரக்குறியீட்டுக்கு உள்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரா அல்லது சாதாரண சவ்வூடு பரவல் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரா என்பதை அறியுமளவுக்கு பெரிய வேறுபாடு இல்லை.
சுவை, தரத்தைத் தவிர்த்துவிட்டால் இரண்டும் ஒன்றுபோலத்தான் இருக்கும். இந்த சூழலானது சவ்வூடு தண்ணீர் ஆலைக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மைய, மாநில அரசுகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும், அது பொதுமக்களுக்கு பயன்படுவதாக இல்லை. விளைவு, மக்கள் தனியார் ஆலைகளால் வழங்கப்படும் சவ்வூடு தண்ணீரின் பக்கம் திரும்பிவிடுகின்றனர்.
ஊரகமோ நகரமோ குழாய் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிநீரானது போதுமான அளவுக்கு தரமாகவும் இருப்பதில்லை. இதனாலும் மக்கள் சவ்வூடு தண்ணீரை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் இப்படிச் செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் பரந்த அளவு, குடிநீர்த் தேக்கங்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களும் தவறான நிர்வாகத்தால் மோசமடைந்துகொண்டிருக்கின்றன.
நீர்த்தேக்கங்களும் தொட்டிகளும் குறிப்பிட்ட காலத்தில் சுத்தம்செய்யப்படுவதில்லை; கசிவுகளும் உரியபடி பராமரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுமே குழாய்த்தண்ணீரானது மாசடைவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களால் செய்யப்படும் சுத்திகரிப்பு என்பது குடிநீரில் குளோரின் தூளைச் சேர்ப்பதுதான்; அதை அப்படியே வீடுகளுக்குச் செல்லும் குழாய்களில் விநியோகம் செய்துவிடுகிறார்கள்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமானது பிரிக்கப்படுவதற்கு முன்னரும் 2014-க்குப் பிறகும், இரண்டு மாநிலங்களிலும் குடிநீர் வழங்கல் சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. பல மாநகரங்கள், நகரங்களில் 30-40 ஆண்டுகளுக்கு முன்னதாகப் போடப்பட்ட குழாய்கள் எல்லாம் இப்போது துருப்பிடித்து மோசமாக அரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்தக் குழாய்களை ஒட்டியே வடிகால் மற்றும் கழிவுநீர்க் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளதால், குடிநீரானது மாசடைந்துள்ளது.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் புதைகுழாய்கள் மாற்றப்படவேண்டும் என்றாலும், அதற்கு ஆகும் செலவு காரணமாக, அரசாங்கங்கள் அதைப் பற்றி அக்கறையே கொள்வதில்லை. இதன் விளைவு, அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிநீரைப் பயன்படுத்தவிடாதபடி மக்கள் தடுக்கப்படுகின்றனர். செலவு வைக்கும் என்றாலும் குழாய்த் தண்ணீரை விட்டுவிட்டு மக்கள் குடுவைத்தண்ணீரையே விரும்புகின்றனர்.
ஜெர்மனி, ரசியா மற்றும் அமெரிக்காவில், சவ்வூடு பரவல் சுத்திகரிப்புத் தண்ணீருக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு யாரும் ஊக்குவிப்பதில்லை. ஆனால் இந்தியாவிலோ காளான்களைப் போல சவ்வூடு தண்ணீர் ஆலைகள் பரவிக்கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஆலைகளை உரியபடி கண்காணிப்பதில்லை என்பதால் அன்றாடம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தெலுங்கு பேசும் மாநிலங்களில் தண்ணீர் ஆலைகள் மீதான கட்டுப்பாடு இல்லாமல் கணக்கில்லாத அளவுக்கு அவை பெருகிவிட்டன. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 18 ஆயிரம் சவ்வூடு சுத்திகரிப்பு ஆலைகள் இருப்பதாகவும் அவற்றில் 90 விழுக்காடு ஆலைகள் அனுமதிபெறாதவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் தொண்டையைத் தழுவிச்செல்லும் தண்ணீருக்குள் அவர்களுக்குத் தெரியாமல் கேடுபயக்கும் நுண்ணுயிரிகளும் உள்ளேபோகின்றன.
இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்கு அமைய, சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு 25 இலட்சம் முதல் 30 இலட்சம்வரை செலவாகும். அப்படி அமைக்கப்பட்டால், 20 லிட்டர் குடிநீர்க்கலன் ஒன்றுக்கு ரூ.30வரை விலைவைக்கமுடியும். இவ்வளவு தொகையை மக்கள் விரும்பாததால், குறைவாக, 4 - 5 இலட்சம் ரூபாய் அளவில் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து, தரம்குறைந்த இயந்திரங்கள் மூலம் ஓரளவுக்கே பதப்படுத்தி குறைந்த அளவே சுத்திகரித்த நீரை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குகின்றனர். இந்தத் தண்ணீரில் எந்த தாது உப்பும் இருப்பதில்லை; விலையும் குறைவாக வைக்கப்படுகிறது.