ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவி, கரோனா பாதிப்புகளின் ’ஹாட்ஸ்பாட்’ எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது மிகப் பெரிய பாதிப்புகளும் இறப்பு விகிதமும் அங்கு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.
மாநகராட்சி, காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் அங்கு நோய்த் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால், தற்போது அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் சராசரியாக 43 என்று இருந்த அன்றாட பாதிப்பு எண்ணிக்கையை, ஜூன் மாதத்தில் 19ஆக குறைத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சகம் ’பிரிஹான்’ மும்பை மாநகராட்சியை பாராட்டியுள்ளது.
தாராவியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாராவியில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கமான வீடுகளில் வசித்து வருவதால், அன்றாடம் வீடுகளுக்கு வெளியே இருக்க வேண்டிய சூழல். அத்துடன் மிகச் சிறிய வீடுகளில் பலர் தங்கியிருப்பதால், அனைவரும் வீடுகளுக்குள் இருக்கச் சொல்வதும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்துவதும் மாநகராட்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
கரோனா பாதிப்பு தொடங்கிய நாட்களில் தாராவியில் யாருமே தாமாக முன்வந்து சோதனை செய்யவில்லை. இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. அதனால் மாநகராட்சி அலுவலர்கள் அங்குள்ள உள்ளூர் தனியார் மருத்துவர்களுடன் கைகோர்த்து தாராவி முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தினர்.
மிகக் குறைந்த கட்டணங்கள் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் உள்ளூர் மருத்துவர்கள் என்பதால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் தாமாக முன்வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டனர். ஆங்காங்கே சிறு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களைக் கணக்கெடுத்து சோதனை செய்து வந்தனர். தாராவி பகுதியில் சோதனைகள் நடத்தி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உதவிய டாக்டர். அனில் பச்னேக்கர், இது குறித்து ஈடிவி பாரத் இதழுக்கு விவரித்துள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினரான டாக்டர். அனில் பச்னேக்கர், கடந்த 35 ஆண்டுகளாக தாராவியில் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகிறார். அவர் கூறும்போது, “ஒரு வாரத்திற்குள் வீடு வீடாகச் சென்று 47,500 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 1100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 150 பேருக்கு தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் நோய்த் தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.
தேசிய அளவிலான பொதுமுடக்கத்தின் எதிரொலியாக, நான்கு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், தாராவியில் நெருக்கம் சற்று குறைந்தது. இதனால் மும்பை மாநகராட்சியினர் அங்கு கோவிட்-19 சோதனைகளை மேலும் முடுக்கி விட்டனர்.
அங்குள்ள கிளினிக்குகளில் கோவிட் சோதனைகளை அதிகப்படுத்துதல், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்தல், தனிமைப்படுத்தலுக்கான முறையான இடங்களை ஏற்படுத்துதல், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளோடு, கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது.