தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சூழலில் இழந்த ஊட்டச் சத்துகளை மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? - குழந்தை பருவ வளர்ச்சி

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றாலும், தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, எவ்வாறு குறைந்த செலவில், இழந்த ஊட்டச் சத்துகளை அரசு மீட்டுத்தர வேண்டும் என்பது தொடர்பாக ’அக்கவுண்டபிலிட்டி இனிஷியேட்டிவ்’ அமைப்பைச் சேர்ந்த அவானி கபூர், ரித்விக் சுக்லா, அவந்திகா ஸ்ரீவஸ்தாவா ஆகியோர் விளக்குகின்றனர். இது குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ...

How COVID-19 has made India's foundational  nutrition programme weaker
How COVID-19 has made India's foundational nutrition programme weaker

By

Published : Jul 6, 2020, 11:22 AM IST

கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இந்தியா இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வில் பயணித்து வருகிறது. கரோனா தொற்றால் மக்களின் ஊட்டச்சத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் அடுத்த சில ஆண்டுகளில் உணரப்பட உள்ளது. ஊரடங்கு காலத்தில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஊட்டச்சத்துத் சேவைகளை மக்களுக்கு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. இந்த ஊட்டச் சத்து குறைபாடு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். போதுமான ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும், அறிவாற்றல் குறைபாடு, மோசமான உடல்நலம், இரத்த சோகை போன்ற வாழ்நாள் பிரச்னைகளுக்கு உட்படுவர்.

இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) என்பது குழந்தைப் பருவ வளர்ச்சிக்கு அடிப்படைக் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியத் திட்டம். இந்தத் திட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவில் 13.78 லட்சம் அங்கன்வாடி மையங்களும், 13.21 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், 11.82 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்களும் உள்ளனர். 45 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்தத் திட்டம் இந்தியாவின் ஊட்டச்சத்து ஊக்குவிப்பு முயற்சிகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது. கரோனா நோய்த் தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பே பலரும் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பினும், இந்தத் தொற்றுப் பரவல் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் நிலையை இன்னும் மோசமாக்கும்.

இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைத் திட்டம் என்பது ஒரு உலகளாவிய திட்டம். அதாவது அனைத்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் (6 மாதங்கள் - 6 வயது), மற்றும் ஊட்டச் சத்து தேவைகள் உள்ள சிலருக்கானது. ஜூன் 2019 நிலவரப்படி, 8.36 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் சூடான சமைத்த உணவு, டேக் ஹோம் ரேஷன்ஸ் அதாவது பருப்பு போன்ற ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்வது போன்ற வடிவில் மேற்கூறிய அனைவரும் கூடுதல் ஊட்டச்சத்தையும் பெற்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன் பெறுவதை போலத் தோன்றினாலும், ஆறு மாதங்கள் - ஆறு ஆண்டுகள் வயதுடைய குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்திற்கான பொருட்கள் கிடைப்பதிலேயே பெரும் பற்றாக்குறை உள்ளது.

மேலும், டேக் ஹோம் ரேஷ்ன் திட்டம் மூலம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களை பெரும்பாலும் மொத்தக் குடும்பத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய ஊட்டச் சத்துகள் தடைபடுகின்றன.

ஊரடங்கால் வேலையிழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே, கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய சமயத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால், மேலும் அதிகப்படியான மக்கள் ஊட்டச் சத்து குறைவாலும், நோய் எதிர்ப்பு சக்தியின்மையினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, சொந்த ஊர் திரும்பிய குடிபெயர் தொழிலாளர்களின் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு செயல்படும் நிலைக்கு அங்கன்வாடி மையங்கள் தள்ளப்பட்டுள்ளன. மேலும், இவர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறைவான பணப் புழக்கத்தைக் கொண்டுள்ளதாலும், தினசரி உணவுத் தேவைகளை கூட பூர்த்தி செய்வது ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அளவைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாக இருக்கும்.

இருந்த போதிலும், நாட்டில் தற்போது நிலவும் கரோனா சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களுக்கு வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயவும், கணக்கெடுப்புப் பணிகளிலும் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் குறித்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கரோனாவுக்கு எதிரான களப்பணியில் நிற்கும் இவர்களுக்கு எவ்வித ஊதியமோ, மருத்துவ உபகரணங்களோ, பாதுகாப்பு உபகரணங்களோ, அத்தியாவசியப் பொருட்களையோ வழங்க அரசு முன்வரவில்லை என்பது வேதனைக்குறிய ஒன்று.

இந்தியாவில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 68% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு என்பது நீண்ட காலத்திற்கு தாக்கத்தை உண்டாக்கும். அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஊட்டச் சத்து பொருள்கள் வழங்க பல்வேறு மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த நடவடிக்கையை எளிமைப்படுத்த அங்கன்வாடி மைய ஊழியர்களின் தேவை அரசிற்கு அவசியமாகிறது. அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்ய்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களை கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். கரோனா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வீடுவீடாகச் செல்லும்போதே, ஊட்டச்சத்து குறித்தும் அங்கன்வாடிப் பணியாளர்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்தல், தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவை முக்கிய நடவடிக்கைகளில் சில. வீடு வீடாக ரேஷன் பொருள்கள் வழங்குதல், ஜார்கண்ட் மாநிலத்தைப் போல மக்களின் தொடர்பைக் குறைக்க பல மாதங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை ஒரே நேரத்தில் வழங்குதல் போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்.

அங்கன்வாடி பயனாளிகளுக்கு உணவு அல்லது ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டால், கூடுதல் ஊட்டச்சத்துக்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கலாம். அதற்கென அவர்களிடம் வங்கிக் கணக்கு இருப்பதை பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்திலும் முக்கியமானதாக கருதப்படுவது என்னவெனில், ஊட்டச் சத்து தொடர்பான அனைத்து நிதிகளும் முழுமையாகவும் சரியான நேரத்திலும் வெளியிடப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் ’போஷான் அபியான் திட்டம்’ வழியாக ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் பல்வேறு பரப்புரைகளையும் அரசு மேற்கொண்டது. கரோனா ஊரடங்கினால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டம் வேகமெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

ABOUT THE AUTHOR

...view details