தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்!

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Surjith

By

Published : Oct 26, 2019, 8:50 PM IST

நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், இதனைத்தடுக்க எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட பலமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அதனை மாநில அரசுகள் அலட்சியப்படுத்திவருகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகள்

இந்தியா முழுவதும் இதுபோன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1990 முதல் 2010ஆம் ஆண்டுவரை பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தி டிரிப்யூன் என்ற பத்திரிகை ஆய்வு செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 10 குழந்தைகள், கர்நாடகாவில் மூன்று குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன என அந்தக் கட்டுரையில் தகவல் வெளிவந்திருந்தது.

முன்னதாக, ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல குழந்தைகள் உயிரிழந்தபோதிலும், ஹரியானாவின் ஷாஹாபாத் பகுதியில் ஐந்து வயதான பிரின்ஸ் என்ற குழந்தை சிக்கிய சம்பவம்தான் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 48 மணி நேரம் தொடர் முயற்சிக்குப் பின்னர் உயிரோடு அந்தக் குழந்தையை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகள்

ஒரு பிரின்ஸ் மீட்கப்பட்டாலும், பல பிரின்ஸ்களை அலட்சியப்போக்கின் காரணமாக நாம் இழந்துள்ளோம். ஆம், 2007ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் கட்னி என்ற இடத்தில் இரண்டு வயதான அமித் என்னும் குழந்தை 56 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்தது. அதே ஆண்டு, குஜராத் கர்மாதியா பகுதியில் திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி மூன்று வயதான ஆரத்தி சவாதா என்ற குழந்தை உயிரிழந்தது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஒன்பது வயதான சண்தீப் என்ற மாணவனும் குஜராத் மேகசானா பகுதியில் ஐந்து வயது குழந்தையும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி உயிரிழந்தன.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகள்

2007 ஏப்ரல் 7ஆம் தேதி ஒரேநாளில் இருவேறு மாநிலங்களில் இரு சின்னஞ்சிறு உயிர்களை ஆழ்துளைக் கிணறு விழுங்கியது. ராஜஸ்தானில் இரண்டு வயது சரிகா 155 அடி ஆழ்துளைக் கிணற்றிலும் குஜராத் மதேலி கிராமத்தில் கின்ஜல் மன் சிங் சவுகான் திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றிலும் சிக்கி உயிரிழந்தனர். இம்மாதிரியான பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆனால், உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த எந்த மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்புகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சோனு என்ற நான்கு வயது குழந்தை பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கம்பிகளாலான வலைகளை வைத்து அடைக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை மதிக்காமல், ஆழ்துளைக் கிணறுகளின் விட்டம் வடஇந்தியாவில் அதிகப்படுத்தப்படுகிறது. தனிமனிதர்களின் மெத்தனப்போக்கு காரணமாகத்தான் ஆழ்துளைக் கிணறுகள் மயானமாக மாறுகிறது. இதனை கடும் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். அதுவரை, சுர்ஜித்துகளின் அழுகுரல் அனைவரின் காதுகளில் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.

இதையும் படிங்க: சுர்ஜித்தை மீட்பது நிச்சயம் - இளைஞர் விளக்க வீடியோ

ABOUT THE AUTHOR

...view details