கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில், 70 வயதான முதியவர் ஒருவர் கரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு 9 லட்சத்து 25 ஆயிரத்து 601 ரூபாய்க்கான பில்லை வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி அந்த பில் தொகையில் ஒரு ரூபாய் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், கரோனாவிற்கு சிகிச்சை அளித்ததற்காக அதிகமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் வசூலிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த தகவல் பரவ தொடங்கியதையடுத்து, பலரும் சமூக வலைதளங்களில் அந்த மருத்துவமனையின் பணம் சுரண்டும் உண்மை முகத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவமனை முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.