பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து ரபேல் விமானங்கள் இன்று (செப்.10) அம்பாலா விமானப்படைத் தளத்தில் முறையாக இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “உலகின் மிகச் சிறந்த போர் விமானம் எனக் கருதப்படும் 405 ஜென் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படை வீரர்களின் கைகளுக்கு வந்துள்ளன.
புகழ்பெற்ற 17 படைப்பிரிவைச் சேர்ந்த (கோல்டன் ஏரோஸ்) விமானத்திற்கு வாழ்த்துக்கள். தற்போது விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் ’மிராஜ் 2000’இன் சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும் எனக்கு Su30MKI ரக விமானம் தான் பிடித்தமானது. நமது வீரர்கள் கடுமையாகப் போர் புரிய புதிய விமானங்கள் கிடைத்துள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விமான இணைப்பு விழாவில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.