இது குறித்து மன்மோகன் சிங், பி.வி. நரசிம்ம ராவ் 1988ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, நான் தெற்கு ஆணையத்தில் பொதுச்செயலாளராக இருந்தேன். அந்த நேரத்தில் அவர் ஜெனீவாவுக்கு வந்தபோது நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம். 1991ஆம் ஆண்டில் அரசு அமைக்கப்பட்ட நாளில், நரசிம்ம ராவ் என்னை அழைத்து, “வாருங்கள், நான் உங்களை நிதி அமைச்சராக்க விரும்புகிறேன்” என்றார். பலரின் ஆச்சரியத்திற்கு நடுவே, நான் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றேன். நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நான் நரசிம்ம ராவிடம் அவரது முழு ஆதரவு கிடைத்தால் மட்டுமே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னேன். அதற்கு அவர், "உங்கள் கைகள் கட்டப்படாமல் இருக்கும். கொள்கைகள் வெற்றிபெற்றால், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வோம் . அவை தோல்வியடைந்தால், நீங்கள் செல்ல வேண்டியிருக்கும்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் ராவ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். நான் அவர்களுக்கு விளக்கினேன். எதிர்க்கட்சிகள் திகைத்துப் போயுள்ளனர் என்ற எண்ணம் எனக்கு வந்தது. பொருளாதார சீர்திருத்தத்தில் அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் என்பது திடீரென நடக்கவில்லை. அக்கால தொலைநோக்கு அரசியல் தலைமை இல்லாமல் அந்த வரலாற்று மாற்றம் சாத்தியமில்லை. நமது பொருளாதாரக் கொள்கைகளை, சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மறு நோக்குநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட முதல் அரசியல் தலைவர் இந்திரா காந்திதான். புதிய தகவல் யுகத்தின் வருகையின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட ராஜீவால் அவரது ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பெரிதும் முன்னெடுக்கப்பட்டன. 1980களின் இரண்டாம் பாதியில் ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசாங்கத்தால் பொருளாதார சீர்திருத்தங்கள் அந்த திசையில் நடை போட்டன.
பொருளாதார சீர்திருத்தங்களின் பிரச்சினைகளை நரசிம்ம ராவ் புரிந்து கொண்ட தைரியத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். 1991-ல் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, நரசிம்ம ராவின் கீழ் நான் நிதியமைச்சராக இருந்தபோது தான் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன.நரசிம்ம ராவ் தலைமையில், நமது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நமது வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுத்தோம். நாங்கள் ஆரம்பித்த சீர்திருத்தங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று இந்திய அனுபவத்தின் தனித்துவமான தன்மை. கொடுக்கப்பட்ட விதிமுறைகளுடன் நாங்கள் ஒட்டவில்லை. அப்போதைய பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநரான திரு. மைக்கேல் காம்டெசஸ் மற்றும் பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பை நான் நினைவு கூர்கிறேன். இந்திய அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்தியாவில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று திரு. நரசிம்ம ராவ் அவரிடம் கூறினார். நம்முடையது ஜனநாயக நாடு. நமது உழைக்கும் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கட்டமைப்பை சரிசெய்தல் திட்டத்தின் விளைவாக எந்த ஒரு பொதுத்துறை ஊழியரும் தனது வேலையை இழக்க அனுமதிக்க முடியாது என்று பன்னாட்டு நிதியத்திடம் தெரிவித்தோம். நமது முன்னுரிமைகளுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் அளவீடு செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை நாங்கள் வழங்கினோம் என்று நான் நம்புகிறேன்.