1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒருங்கிணைந்த இந்தியா மவுண்ட்பேட்டன் திட்டத்தின்படி இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போதிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களில் காஷ்மீரும் ஒன்று, சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைவதா அல்லது பாகிஸ்தானோடு இணைவதா... இல்லை தனி நாடாக இருந்து கொள்வதா... என அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என ஆங்கிலேயே அரசு அறிவித்திருந்தது.
காஷ்மீரின் அப்போதைய மன்னராக இருந்த ஹரிசிங், பாகிஸ்தான் இந்தியா என எதனோடும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். அன்றிலிருந்து தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீரை அடையும் போர். காஷ்மீரை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர பாகிஸ்தான் தீவிரமாக முயன்றது.
இது ஒருபுறமிருக்க, காஷ்மீர் தனி நாடாக இருக்க வேண்டும் என சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ’அனைத்து ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு’ என்னும் கட்சி போராடிவந்தது. இதன் தலைவராக இருந்தவர் ஷேக் அப்துல்லா. அவரை தன்பக்கம் இழுக்க முயன்றார் பாகிஸ்தானின் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா. ஆனால், ஷேக் அப்துல்லா அதற்கு ஒத்துழைக்கவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டும் என விரும்பிய ஷேக் அப்துல்லா, மக்களைத் திரட்டிப் போராடிவந்தார்.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தன. ஷேக் அப்துல்லா திரட்டிய மக்கள் மட்டும் பாகிஸ்தான் படையை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்திவந்தனர்.