தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய வரலாற்றில் முதன்முறையாக... சரியான நேரத்தில் இயக்கப்பட்ட இந்திய ரயில்கள்! - Indian Railway

டெல்லி: இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும், ஜூலை 1ஆம் தேதி முதல் முதன்முறையாக சரியான நேரத்தில் சேருமிடத்திற்குச் சென்றடைந்துள்ளன.

Indian Railways
Indian Railways

By

Published : Jul 2, 2020, 9:51 PM IST

பொதுவாக இந்திய ரயில்கள் எதுவும் சரியான நேரத்திற்குச் சேருமிடத்தைச் சென்றடையாது. பெரும்பாலான இந்திய ரயில்கள் மணிக்கணக்கிலும் ஏன் சில ரயில்கள் நாள் கணக்கிலும் தாமாதமாகச் செல்லும்ம் மோசமான சம்பவங்களும் நடைபெறுவது வழக்கமாகும்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் அனைத்து ரயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்படுவது என்பது இதுவே முதன்முறை. முன்னதாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட ரயில்களில் 99.54 விழுக்காடு ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. அதாவது, கடந்த ஜூன் 23ஆம் தேதி ஒரே ஒரு ரயில் மட்டுமே தாமதமானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே நிர்வாக இயக்குநர் ஆர்.டி. பஜ்பாய் கூறுகையில், "நாங்கள் ஜூலை 1ஆம் தேதி, 201 ரயில்களை இயக்கினோம். அவை அனைத்தும் சரியான நேரத்தில் சேருமிடங்களை அடைந்தன. இருப்பினும், தற்போது இயங்கும் ரயில்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும்கூட 100 விழுக்காடு ரயில்களிலும் நேரம் தவறாமையைத் தற்போது எட்டியுள்ளோம்.

பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னரும் இதேபோன்று சரியான நேரத்தில் செல்ல இலக்கு வைத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் நாங்கள் தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், சிக்னல்களில் இருந்த பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் ரயில்கள் சரியான நேரத்தில் சென்றடைய இது உதவும்" என்றார்.

இத்தகவலை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், இந்த ஊரடங்கு காலத்தில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் வெறும் இரண்டு விழுக்காடு ரயில்களே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே சார்பில் வழக்கமாக நாள்தோறும் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படும். ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக நாள்தோறும் வெறும் 230 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: டெல்லி டூ லக்னோ : யோகியை வீழ்த்தும் தலைவியாக மாறுகிறாரா பிரியங்கா?

ABOUT THE AUTHOR

...view details