சென்னை - பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதங்களைக் கடந்து இஸ்லாமிய, இந்துப் பெண்கள் முன்னின்று நடத்திவரும், இப்போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் பதின்மூன்றாம் நாளான நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி பாக்கியலட்சுமிக்கு ஒன்பதாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சி போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.
அப்போது பாக்கியலட்சுமிக்கு இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் பூமாலை மற்றும் வளையல்கள் அணிவித்து வாழ்த்தினர். மேலும், அங்கு வந்தவர்களுக்கு CAAவிற்கு எதிராக அச்சிடப்பட்டிருந்த தாம்பூலப் பையை விக்னேஷ் வழங்கினார்.
பின்னர், மேடையில் பேசிய விக்னேஷ், இந்து-இஸ்லாமியர்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த முயற்சியைத் தாங்கள் செய்திருப்பதாகவும், ஒருபோதும் இந்து-இஸ்லாமியர் சகோதரத்துவத்தை யாராலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.