மனிதர்கள், விலங்குகளின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 27 பூச்சுக்கொல்லி மருந்துகளை தடைசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் உற்பத்தி மற்றும் வருவாய் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும் என இமாச்சலப் பிரதேச மாநில விவசாயிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
"இயற்கை வேளாண்மை எங்களது உற்பத்தியைக் குறைத்துவிடும். ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை உற்பத்தி செய்யும் எங்கள் மாநிலங்களில் பூச்சிக்கொல்லி தடை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என டிம்பிள் பஞ்சாட்டா என்ற தோட்டக்கலை விவசாயி தெரிவித்துள்ளார்.
"அரசின் இந்தத் தடையால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீளவே முடியாது" என்கிறார் விவசாயி பிரேம் சர்மா.
அதேவேளை, விவசாயிகளின் கவலைகளை மறுக்கும் விதமாக இமாச்சலப் பிரதேச மாநில தோட்டக்கலைத் துறை இயக்குநர் மதன் மோகன் சர்மா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
"அரசின் இந்த அறிவிப்பு விவசாயப் பெருமக்களைப் பாதிக்காது. அரசு நான்கு விதமான மாற்று பூச்சு மருந்துகளைத் தேர்வுசெய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. எனவே, விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.