கரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், எட்டு மாத காலத்திற்குப் பிறகு கேரளாவில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களும் ஜனவரி 4ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் கல்வி நிலையங்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 மணி நேரமாவது மாணவ மாணவிகள் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்படும்பட்சத்தில், வகுப்புகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும் எனப் பாதுகாப்பு வழிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகளில் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதா என்பதை கல்வி நிலையத்தில் முதல்வர் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது