உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. எளிதாகப் பரவும் கரோனா தொற்றை தடுப்பதற்காக மாஸ்க் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மவுத்வாஷ் பயன்படுத்துவது கூட சிறிது நேரம் வரை கரோனா பரவலைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நூற்றுக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மிகப் பழமையான மருத்துவ இதழ்களில் ஒன்றான ஐ.ஜே.எம்.ஆர், காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோருக்கு கரோனா தொற்று பாதிப்பால் அதிக ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, கண்களில் ஏற்படும் மல்டிஃபாக்டோரியல் என்ற அரிய வகை நோயானது, காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களிடையே குறைவாக இருந்தாலும், நோய்த் தொற்றுக்கு அதிக அளவில் வழிவகுக்கிறது. இது கண் பார்வை இழப்பு அல்லது கார்னியல் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாய சூழலுக்கு வழிவகுக்கும். கண்களின் வண்ண மேற்பரப்பு ’நாசோலாக்ரிமல் குழாய்’ வழியாக சுவாசக் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், கண்கள் வழியாகச் சென்று சுவாசக் குழாயை தொற்று எளிதாக அடைந்து விடுகிறது.
கரோனா வைரஸின் சில திரிபுகள் மனிதர்களிடையே பலவிதமான கண் சிக்கல்களை ஏற்படுத்த வல்லவை. குறிப்பாக கண் திசுக்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன. காற்றில் பரவும் நீர்த்துளிகள் கண் மேற்பரப்பை எளிதில் பாதிக்கும். இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவோராக உள்ளனர். உலக அளவில் 140 மில்லியன் மக்கள் காண்டாக்ட் லென்ஸ்உபயோகித்து வருகின்றனர். சுவாசப் பிரச்னை உள்ள கரோனா நோயாளிகளின் கண்ணீர் வழியாகவும் கரோனா எளிதாகப் பரவும்.
மேலும், புகைப்பிடித்தல், லென்ஸ்களை இரவிலும் பயன்படுத்துதல், லென்ஸ்களை கிருமி நீக்கம் செய்வதற்காக தண்ணீரைப் பயன்படுத்துதல், மோசமான லென்ஸ், கை சுகாதாரமாக இல்லாதது ஆகியவை லென்ஸ்கள் மீது தொற்று உற்பத்தியை அதிகரிக்கிறது. காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதற்கு முன்பும், அவற்றை அகற்றுவதற்கு முன்பும் கைகளின் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிபிஇ உடை அணியும் மருத்துவ ஊழியர்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிந்துள்ளோர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்போர், கண் கண்ணாடிகள் அணியவே அறிவுறுத்தப்படுகின்றனர். கண்ணாடிகளை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்வது எளிது. ஆனால், லென்ஸ்கள் போன்றவை மாற்றப்பட வேண்டும் அல்லது முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இறுதியாக, எந்த லென்ஸ் வகையில் கரோனா தொற்றால் பரவ முடியாது என்பதைக் குறித்து கண்டறிய புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ள வேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.