உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருபவர் நடிகை ஹேமமாலினி. 2014ஆம் ஆண்டு பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹேமமாலினி, இந்த முறையும் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக மார்ச் 25ஆம் தேதி மதுரா தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று மதுரா தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஹேமமாலினி, அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றார். பின்னர், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த கோதுமை பயிரை தன் இரு கரங்களால் பெற்றுக்கொண்டார்.
இதன்பின்னர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசிய ஹேமமாலினி, தான் மதுரா தொகுதிக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளதால் மக்கள் தன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும், எதிர்காலத்தில் தொகுதிக்கு இன்னும் பல நலத்திட்டங்கள் செய்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.