வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாக மாறி ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியான காக்கிநாடாவில் கரையை கடந்தது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்க தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் 11.5 முதல் 24 செமீ வரை மழை பெய்துள்ளது.
ஆந்திராவில் பலத்த மழை: காக்கிநாடாவில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஆந்திராவில் பலத்த மழை
ஹைதராபாத்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாவில் கரையை கடந்த நிலையில், ஆந்திராவில் பலத்த மழை பெய்துவருகிறது.
தெலங்கானாவில் பெரும்பான்மையான இடங்களில் லேசான முதல் மிதமான அளவிலும் சில இடங்களில் கன முதல் மிக கன அளவிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்நாடகா, ராயலசீமா, கோவா, மத்திய மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அக்டோபர் மாதத்தில், கிழக்கு கடலோர பகுதிகளான ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழக்கமாகவே கன மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 13ஆம் தேதி வரை, ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடல் சீற்றமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.