இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சக அலுவலர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "கர்நாடகாவில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதனடிப்படையில், இதுதொடர்பான கடிதம் ஒன்று சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நிதியமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, ரிஷிகேஷ் ( உத்தரகாண்ட்), பாட்னா (பீகார்) , ஜோத்பூர் (ராஜஸ்தான்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), போப்பால் (மத்தியப் பிரதேசம்), புவனேஸ்வர் (ஒடிசா) ஆகிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு பயன்பாட்டில் இயக்கிக் கொண்டிருக்கின்றன.
அதேபோன்று, ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கொரக்பூர் (உத்தரப் பிரதேசம்), மங்கால்கிரி (ஆந்திரா) ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு செயல்பாட்டில் உள்ளன. தொடர்ந்து, நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடுத்த வாரம் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
மேலும், மதுரை, கல்யாணி (மேற்கு வங்கம்), பிலிநகர் ( தெலங்கானா), கவுகாத்தி(அசாம்), பதின்டா (பஞ்சாப்), பிலாஸ்பூர் (ஹிமாச்சல் பிரதேசம்), தியோகார் (ஜார்கண்ட்), சாம்பா (ஜம்மு), அவந்திபோரா (காஷ்மீர்), ராஜ்கோட் (குஜராத்) உள்ளிட்ட நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதனிடையே, மனேதியில் (ஹரியானா) எம்ஸ் அமைப்பதற்கான நில தேடப்பட்டுவருகிறது.