அதிக கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ள மாநிலங்களில், அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக இம்மாநிலங்களின் நகர்ப்புறங்களில் அதிக கரோனா பாதிப்பாளர்கள் இருப்பதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் நகர்ப்புறங்களில், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். நெருக்கடியான பகுதிகளில் மக்கள் வாழ்வது, சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பது, சுகாதாரத்தைப் பேணுவதில் இருக்கிற சிக்கல் போன்ற காரணங்களால், அப்பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக இருக்கிறது என மத்திய அரசு அடிக்கோடிட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கடி, அப்பகுதியின் புவியியல் தன்மையை ஆராயும் வகையில் மூத்த கமாண்டர் செயல்படுவார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கமாண்டர்கள், நகர்ப்புறங்களில் தடுப்புப் பணிகளில் இருக்கும் சிக்கல்கள், ஆயத்தப்பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து தினந்தோறும் மாவட்ட நிர்வாகத்திடமும் மாநில அரசு மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவலளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது
மேலும், களத்தில் கண்காணிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தனி மனிதப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும்; தினசரி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பகுப்பாய்வு செய்யப்பட்டு களத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆரோக்கிய சேது, கிருமி நாசினி அவசியம் - ஏ.ஏ.ஐ அறிவுறுத்தல்