புதுச்சேரியில் கரோனா காலத்திலும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண்பேடிக்குமான பனிப்போர் நின்றபாடில்லை. அவ்வப்போது அரசு ரீதியான சிக்கலை கெடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். அதேபோன்று ஆளுநர் கிரண்பேடி சலைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கிரண்பேடியை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்காக செல்லும்போது புதுச்சேரி அரசு பேருந்தின் தடத்தை கேன்சல் செய்து பயன்படுத்தினார். ஆனால், பேருந்தை பயன்படுத்தியதற்கான தொகையை இதுவரை ஆளுநர் மாளிகை செலுத்தவில்லை. அவர் தூய்மையானவர் இல்லை, கிரண்பேடி மீது வழக்கு தொடரப்படும். இரண்டு வருடம் இருப்பதாக கூறிவிட்டு பதவியில் நீடிக்கிறார்.
அவர் பதவி விட்டு சென்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயாராக உள்ளேன். பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணம். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவரிடம் புகார் கடிதம் அளிக்கவுள்ளேன். கிரண்பேடி இருக்கும் வரை புதுச்சேரியில் அடுத்த நூறு ஆண்டுகள் ஆனாலும் பாஜக ஆட்சி அமையாது" என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க:JusticeForJeyarajandBennicks: ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கும்: மத்திய அரசு அறிவிப்பு