திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 48 நாள்களுக்கு மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகள் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.
கரோனா பரவல் அச்சுறுத்தல்களுக்கு நடுவே, பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளித்த கேரள அரசு, பக்தர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய இடங்களாக மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மாறியுள்ள நிலையில், கேரள அரசு மாதந்திர பூஜைகளுக்காக கடந்த மாதம் ஐந்து நாள்களுக்கு கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு அனுமதித்தது. இந்நிலையில் அரசு வெளியிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில்,
- மோசமான காற்றோட்டம், நெரிசலான இடங்கள், பக்தர்கள் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளக்கூடிய நெருக்கமான இடங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஒவ்வொரு நாளும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
- நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பூஜைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.
- கோயிலுக்கு வரும் பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுவதை உறுதி செய்யவேண்டும்.
- கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிலக்கல்லை அடைவதற்கு முன் 24 மணி நேரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளைக் கொண்டிருக்க வேண்டும். சில நாள்களுக்கு முன்னதாக தொற்றால் பாதித்தவர்களோ, அல்லது தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களோ கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
- மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- பக்தர்களுடன் கோயிலுக்கு வரும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், சமையல்காரர்கள் ஆகியோரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்.. ஆன்லைன் புக்கிங் தொடக்கம்!