கடந்த ஜூன் 6ஆம் தேதி, ஃபேஸ்புக் நேரலை மூலம் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் யதின் ஒசா, நீதிமன்றத்தை சூதாட்ட குகை என விமர்சித்தார்.
பணப்பலம் உள்ளவர்கள், கடத்தல் தொழில் செய்பவர்கள், துரோகிகள் ஆகியோருக்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, நீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் சோனியா கொக்காணி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு இவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
விடியும் வரை காவல் துறை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தவறினால், 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஒஷா மேல்முறையீடு செய்யும் வகையில், குஜராத் உயர் நீதிமன்றமே தன் உத்தரவுக்கு 60 நாள்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
முன்னதாக, தான் தெரிவித்த கருத்துக்கு ஒசா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ஒசா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மின்சார கணக்கீடு முறைக்கு எதிரான மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!