காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் சசி தரூர். இவரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த மரணம் அப்போது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த வழக்கில் சசி தரூர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், டெல்லி காவல்துறை சுனந்தாவின் ட்விட்டர் பதிவுகளை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று கூறி, சசி தரூர் தரப்பு மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சுனந்தாவின் கடைசி ட்வீட்டின்படி, அவர் மனநிலை சாதாரணமாக இருப்பதாகத் தெரிகிறது என்றும், இறப்பதற்கு முன்பு வரை அதாவது ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 4.46 வரை அவர் ட்வீட் செய்துள்ளார். டெல்லி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக ட்விட்டர் பதிவுகளை முறையாகத் தாக்கல் செய்யவில்லை, பல சமூக ஊடக தளங்களில், இந்த விவரங்கள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.