கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இரண்டு மாதங்களாக முடக்கப்பட்ட உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு தேவையற்ற விமானப் பயணத்தை தவிர்க்கும் நோக்கில் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தது.
விமானப் பயணங்களின் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, வீர் விக்ராந்த் சவுகான் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது.