இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக லடாக் பகுதியில் சீனா சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவப் படையினரை குவித்து, இந்தியாவில் ஆக்கிரமிப்புப் பணிகளை மேற்கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த அசாதாரண சூழலால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லையில் நிலவும் உண்மையான நிலவரத்தை மறந்து, கனவுலகத்தில் வாழ்கிறார் என்றும் நேற்று ராகுல் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் தரும் விதமாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”கையில் வலி ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை செய்யலாம். ஆனால் கையே வலியாக மாறினால் அதற்கு என்ன செய்வது” என காங்கிரசின் கைச் சின்னத்தை ட்விட்டரில் கவித்துவமாக விமர்சித்திருந்தார்.