உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை பல்வேறு தலைவர்கள் சந்தித்துவரும் நிலையில், ஹத்ராஸ் சென்ற அண்ணல் அம்பேத்கரின் கொள்ளுப்பேரன் ராஜ்ரத்னா அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், பெளத்த மதத்தை தழுவ குடும்பத்தாரிடம் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதனை ஏற்று, அக்டோபர் 14ஆம் தேதி, ஹத்ராஸில் உள்ள 250 தலித் குடும்பங்கள் பெளத்த மதத்தை தழுவ உள்ளனர். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெளத்த மதத்தை தழுவ குறிப்பிட்ட குடும்பத்தாரிடம் மட்டுமே கோரிக்கைவிடுத்தோம்.
ஆனால், நாளை, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 250 தலித் குடும்பங்கள் பெளத்த மதத்தை தழுவ உள்ளன" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காவல் துறையின் எதிர்ப்பை மீறி ஹத்ராஸுக்கு சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அம்பேத்கர், 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, நாக்பூரில் மூன்று லட்சத்து 65 ஆயிரம் பேருடன் பெளத்த மதத்தை தழுவினார்.