உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனறும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப் பிரதேசத்தில் சாதிய கலவரத்தை தூண்ட வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. அனுப்பப்பட்ட 100 கோடி ரூபாயில் 50 கோடி ரூபாய் மொரிஷியஸ் நாட்டில் இருந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.