தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்க யோகி ராஜினாமா செய்திட வேண்டும்' - ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை

டெல்லி: ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

"ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்க யோகி ராஜினாமா செய்திட வேண்டும்" - பிரியங்கா காந்தி
"ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்க யோகி ராஜினாமா செய்திட வேண்டும்" - பிரியங்கா காந்தி

By

Published : Oct 1, 2020, 12:02 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு ஆளரவரமற்ற இடத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை சிலர் கண்டெடுத்தனர்.

பின்னர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

உத்தரப்பிரதேச அரசின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரான பிரியங்கா காந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு, அவர்களை அச்சுறுத்திவருகிறது.

மரணத்தில்கூட ஒவ்வொரு மனித உரிமையை காப்பாற்ற முடியாத அரசாகவே உ.பி. பாஜக அரசின் நிர்வாகம் இருக்கிறது. இந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமையில் விவரிக்க முடியாத பெருந்துயரை உயிரிழந்த பெண்ணும், அவரது குடும்பமும் இந்த அரசால் கண்டுள்ளன.

பாஜக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் சர்வசாதாரணமாக நடைபெறும். அவர்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, மனித உரிமை என எல்லாம் பறிக்கப்படும்.

உ.பி.யில் நடைபெற்றுவரும் பாஜக அரசு பட்டியலினத்தவர்களை அடக்கி, ஒடுக்கி சுரண்டிவருகிறது. அவர்களின் சித்தாந்தமே அதுவாக இருக்கும்போது, ஆட்சியும் அவ்வாறு தானே இருக்கும். அவர்கள் ஆட்சி தொடரும் வரை இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள் சர்வசாதாரணமாக உ.பி.யில் நடைபெற்றுவருகின்றன. கொடூரமான இந்தக் குற்றங்களைத் தடுக்க திராணியற்ற முதலமைச்சராக யோகி இருக்கிறார். இனி மேலும் முதலமைச்சராக தொடர அவருக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மௌனம் கொடூரமானது. யோகி ஆதித்யநாத் தனது பதவியை விட்டு விலகும்போது மட்டுமே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details