உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதியன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைத்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை, சிலர் கண்டெடுத்தனர்.
அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை செப்டம்பர் 30ஆம் தேதியன்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்படுகொலை வழக்கை கையாண்ட உத்தரப் பிரதேச அரசின் அராஜகப் போக்கிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அம்மாநில காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்தவர்கள், இவ்வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டுமென பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "ஹத்ராஸ் கொடூர சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் அதில் நடந்த உண்மைகள் வெளியே தெரியவரும். மேலும், சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா மற்றும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (அக்டோபர் 27) விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான பெண்ணுரிமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், உத்தரப் பிரதேசத்தில் இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்ற அச்சத்தையும் எழுப்பியிருந்தார்.
அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் சாட்சிகளுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விவரங்களை உத்தரப் பிரதேச அரசு அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், "ஹத்ராஸ் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்படுகொலை வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்காது. அலகாபாத் உயர் நீதிமன்றமே ஹத்ராஸ் வழக்கு விசாரணையை கண்காணிக்கும். வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எதுவும் எடுக்கவில்லை. சி.பி.ஐ தனது விசாரணையின் இறுதி நிலை அறிக்கைகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். சி.பி.ஐ. விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருத்தமானது. சிபிஐ விசாரணையை முடித்த பிறகு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம்" என கூறியுள்ளது.