உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே எரித்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டார் என நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.ஷா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ஏ.பி.ஷா இதுகுறித்து மேலும் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சந்தீப் சிங், ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரே முக்கிய குற்றவாளி என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
சந்தீப் சிங்குடன் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் இருந்த காரணத்தால் சகோதரர் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை விசாரிக்க வேண்டும். குற்றம் நடைபெற்ற இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மட்டுமில்லை, கிராம மக்கள் சிலரும் இருந்தனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் காவல்துறையினர் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் இதில் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.