ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய சந்தீப், லூவ்குஷ், ரவி, ராமு ஆகிய நான்கு பேர் மீது சிபிஐ இன்று (டிசம்பர் 18) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாத்ராஸில் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இளம்பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை செப்டம்பர் 30ஆம் தேதியன்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை கையாண்ட உத்தரப் பிரதேச அரசின் போக்கிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதற்கான சிபிஐ தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்திவருகிறது.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - போலீஸுக்கு அடி உதை