கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள ஒரு கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு அங்கிருந்து கிராமவாசிகள் சிலர், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து கொடுத்ததாகத் தெரிகிறது.
அந்த அன்னாசிப் பழத்தை யானை கடித்தபோது, அதிலிருந்த வெடி வெடித்து யானையின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வலியால் யானை வெள்ளாறு நதியில் இறங்கியுள்ளது. ஆற்றில் தனக்கு உதவ வந்த வனத்துறையினரை அனுமதித்காத யானை, ஆற்றிலேயே மே 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.
நாடு முழுவதும் இந்தச் சம்பவத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். இச்சம்பவம் குறித்து மன்னார்கட் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவத்தை வைத்து சிலர் வெறுப்புவாத பரப்புரைகளில் ஈடுபட்டுவருவது வேதனை தருவதாகக் கூறியுள்ளார். இது குறித்து தனது நீண்ட ட்விட்டர் பதிவில் பினராயி விஜயன், "பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு துன்பியல் சம்பவத்தில் கர்ப்பிணி யானை உயரிழந்துள்ளது.
இது குறித்து பலரும் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வேதனை வீணாகாது என்று உறுதியளிக்க விரும்புகிறேன். நீதி எப்போதும் வெல்லும்.
சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை மையமாகக் கொண்டு விசாரணை தற்போது நடந்துவருகிறது. இந்தச் சம்பவத்தைக் காவல் துறையும் வனத்துறையும் இணைந்து விசாரித்துவருகிறது. மாவட்ட காவல் துறைத் தலைவரும், மாவட்ட வன அலுவலரும் இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வர தேவையான அனைத்தையும் செய்வோம்.
மேலும், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் நடைபெறும் மோதல்கள் அதிகரித்துள்ள காரணங்களையும் சரி செய்ய முயற்சிப்போம். பருவநிலை மாற்றம் என்பது மனிதர்கள் விலங்குகள் என இரு தரப்பையும் மோசமாக பாதித்துள்ளது.
இந்த துன்பியல் சம்பவத்தை வைத்து சிலர் வெறுப்புவாத பரப்புரைகளில் ஈடுபட்டுவருவது வேதனை தருகிறது. தவறான விளக்கங்கள், பகுதி உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பொய்கள் இங்கிருக்கும் உண்மையை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.
அநீதிக்கு எதிரான சீற்றத்தை மதிக்கும் சமூகம் கேரளா. அநீதிக்கு எதிரான குரல்கள் கண்டிப்பாக கேட்கப்படடும். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அநீதியை அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுபவர்களாக நாம் இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'அவளுக்குத் தோழியாக இருக்கிறேன்' - சிறுமி மீதான யானையின் பாசம்!