ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இரு மாநிலங்களிலும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வாக்குப்பதிவும் அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2ஆம் தேதியும் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் தேதியும் முடிவடைகிறது.
ஹரியானா தேர்தல் களம்
மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் 1.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டதில் பாஜக 47 இடங்களில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. மேலும் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தொகுதி தேர்தலிலும் ஹரியானாவின் 10 தொகுதிகளிலுமே பாஜக வெற்றிபெற்று தன்னுடைய தனிப்பெரும்பான்மையை நிரூபித்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தல் அறிவிப்பால் ஹரியானாவின் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!