கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு தீவிரமாக்கப்பட்டது. இதன் மூலம் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளின் வருவாயும் பெருகத் தொடங்கியது.
வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை பெரிதும் சார்ந்துள்ளன. அதேவேளை இதன் காரணமாக ஏற்பட்ட பின்விளைவுகளையும் அந்த மாநிலங்கள் கண்டுள்ளன. இதையடுத்து 27 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அங்கு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இரு மாநில விவசாயிகள் இந்த அறிவிப்பின் காரணமாக தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் ஹரியானா மாநிலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுடன் பருத்தி, கரும்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் இந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் 75 விழுக்காடு பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லிகளையே சார்ந்துள்ளனர்.