டெல்லி:நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் மக்களை மிகவும் அச்சுறுத்திவரும் நிலையில், நுரையீரலை தாக்கும் நிமோனியா நோய் குழந்தைகளையும், முதியவர்களையும் அண்மைக்காலமாக அதிகளவு தாக்கிவருகிறது. அவர்கள் எளிதில் கரோனா தொற்றுக்கும் ஆளாக நேரிடுகிறது.
இதனைத் தடுக்கும் நோக்கில், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிமோனியாவிற்கு எதிரான இந்தியாவின் முதல் நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியான "நியூமோசில்"-ஐ தயாரித்துள்ளது. தடுப்பூசி பரிசோதனைகள் நல்ல பலனை அளித்ததைத் தொடர்ந்து நேற்று (டிச. 28) மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தடுப்பு மருந்தின் பயன்பாட்டை தொடங்கிவைத்தார்.
இந்தத் தடுப்பு மருந்து, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மிகவும் மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும், இந்தத் தடுப்பூசியை சுமார் 170 நாடுகளில் பயன்படுத்த உள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "இந்தியாவின் தடுப்பூசி தேவைகளில் சீரம் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது. இது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் நிமோனியா தடுப்பூசி. இந்த மருந்து தனது சோதனையின் போது பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையை நிரூபித்துள்ளது.
நியூமோசில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு வெவ்வேறு தடுப்பூசி அட்டவணைகளைப் பயன்படுத்தி நிர்வகிக்கப்படும். மருத்துவ பரிசோதனைகளின் போது, நிமோனியா நோயைத் தடுப்பதில் நிமோசில் பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என்று கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் நிமோசில் மருந்து, நிபுணர் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின், கடந்த ஜூலை மாதம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் அனுமதி பெற்றது. சீரம் நிறுவனம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அறிவியல் மற்றும் மருத்துவ சமூகமும் எதிர்காலத்தில் இன்னும் பல உயிர் காக்கும் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியைத் தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!