2012ஆம் ஆண்டில் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில் 2013 மார்ச் 11ஆம் தேதி சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு குற்றவாளி சிறுவர் என்பதால் மூன்றாண்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
நிர்பயா வன்கொடுமை தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரையும் வரும் மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலையில் தூக்கில்போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தூக்குத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நான்கு பேரையும் தூக்கிலேற்ற மீரட்டைச் சேர்ந்த உத்தரப் பிரதேச சிறைத் துறை ஊழியரான பவன் ஜலாத் என்பவரைத் திகார் சிறைத் துறை தேர்ந்தெடுத்தது.