இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த சில ஆண்டுகளாகவே பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிவருகிறது. இஸ்ரோவுக்குத் தேவையான பாகங்களை பெங்களூருவில் உள்ள அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் உற்பத்திசெய்கிறது.
இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனம் தான் இதுவரை தயாரித்ததிலேயே மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே இஸ்ரோவுக்கு நேற்று வழங்கியது.
சி 32-எல்ஹெச் 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொட்டி ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.- III ராக்கெட் ஏவ தேவையான திறனுடன் அலுமினிய அலாயால் செய்யப்பட்ட ஒரு கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியாகும். நான்கு மீட்டர் விட்டம் கொண்ட இந்தத் தொட்டியில் 5,755 கிலோ ராக்கெட் எரிபொருளை சேமிக்கலாம்.