கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஜன19) செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். “மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான்கு மணி நேரம் விரிவாக விவாதித்தேன். இந்தக் கலந்துரையாடல் நல்லவிதமாக அமைந்தது. மாநிலத்துக்கு பெருமளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் டாவோஸ் செல்கிறேன்.
அங்கு பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பெங்களூரு திரும்பிய இரண்டு அல்லது மூன்று நாள்களில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன்” என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அந்தக் கேள்விகளும் அதற்கு பி.எஸ். எடியூரப்பா அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக குழப்பங்கள் நிகழ்வதாகச் செய்திகள் வெளியாகின்றனவே?
பதில்: அது தவறு, பிரச்னைகள் எதுவும் இல்லை.
கேள்வி: டாவோஸிலிருந்து திரும்பிய பின்னர் அமித் ஷாவை சந்திப்பீர்களா?
பதில்: அமித் ஷாவை நான் சந்திப்பது இயல்பானது.
கேள்வி: டாவோஸ் மாநாடு பயணம் எவ்வாறு இருக்கும்?
பதில்: மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் டாவோஸ் செல்கிறேன். ஏற்கனவே 38 தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடனான தொடர்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசின் அதிகார எல்லைக்குள்பட்டு வழங்குவேன். முதலீடு தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் நீக்குவேன். இந்த முயற்சிகளால் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.