ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை ரத்துசெய்த பிறகு, அம்மாநிலத்தில் நடைபெறும் இந்த முதல் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்புத் தகுதியான 370ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.