2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதில், 59 பேர் தீயில் கருகி பலியாயினர்.
அதன் விளைவாக, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாவர்.
இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.
'குஜராத்தின் அரசியல் வரலாறு' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த பாடப் புத்தகக்தில், "மாநில அரசைக் கவிழ்க்கும் நோக்கில், 2002 பிப்ரவரி 27ஆம் தேதி, அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதில் 59 இந்து மத சேவகர்கள் தீயில் கருகி இறந்தனர். இந்த சதிக்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர்" என்ற வரி இடம்பெற்றுள்ளது.