பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு ’பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா . இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவரது ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 சிறுமிகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக நித்தியானந்தா மற்றும் அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது அகமதாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நித்தியானந்தா வெளிநாடு தப்பியோடி விட்டார் என்ற தகவலையடுத்து காவல் துறையினர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள ஆசிரமத்தில் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அதில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.