விழுப்புரம் மாவட்டம், சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், சங்கர். தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநரான இவர் தனது நண்பர் சோமு என்பவருடன், கடந்த 16ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையிலிருந்து 18 மதுபானப் பாட்டில்களை வாங்கிக்கொண்டு மோட்டார் இருசக்கர வாகனத்தில் சித்தலம்பட்டு நோக்கி வந்துள்ளார். அப்போது அவர்கள் புதுச்சேரி திருக்கனூர் சோதனைச் சாவடி அருகே வந்தடைந்தனர்.
இந்நிலையில் அவர்கள், புதுச்சேரி மாநில காவல் துறையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சங்கரிடமும் சோமுவிடமும் இருந்து 15 மதுபானப் பாட்டில்களை புதுச்சேரி காவல் துறையினர் பறித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் அந்தக் காவலர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து புதுவை மேற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட திருக்கனூர் காவல் துறை நடத்திய விசாரணையிலும், திருக்கனூர் மாநில எல்லையில் நடத்திய சிசிடிவி கேமரா ஆய்விலும், புதுவை காவல் துறையினர் நான்கு பேரும் சோமு, சங்கரிடமிருந்து மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தது உறுதியானது. இதையடுத்து, அதிரடியாக புதுச்சேரி காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி மாநில டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி காவலர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதில் செல்வம், கோகுலன், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரசன்னாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காவல் ஆணையர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கிய நபருக்கு வலைவீச்சு