டெல்லி: கடுமையான, நீடித்த ஊரடங்கிற்குப் பின்பு இந்திய பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "எரிசக்தி நுகர்வு வளர்ச்சி அக்டோபரில் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் 10 விழுக்காடு உயர்ந்து 1.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வங்கிக் கடன் வழங்கல் 5.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. அந்நிய முதலீடும் ஏப்ரல்- ஆகஸ்ட் வரையில் 35.37 பில்லியன் டாலரிலிருந்து 13 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மூன்றாவது காலண்டியில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 26.62 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 13.78 லட்சம் விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு 12,373.33 கோடி ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளும் நல்ல பலன்களை தந்துள்ளன. கிசான் கடன் அட்டைகள் 157.44 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 1,43,262 கோடி ரூபாய் இரண்டு கட்டங்களாக கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பொருளாதாரத்தை மீட்பதற்காக தற்சார்பு இந்தியா 3.0 என்ற பெயரில் நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. 12 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள இந்த தொகுப்பில் சுமார் 2.65 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருக்கும். புதிய தொகுப்பு தனிநபர்களுக்கும் தொழில்களுக்கும் எந்த வகையான நன்மைகளை அளிக்கிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
தனிநபர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டங்கள்:
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு தற்சார்பு இந்தியா ரோஜர் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலை மீட்க, 2 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீட்டை வாங்குபவர்கள், கட்டுபவர்களுக்கு வருமான வரி நிவாரணம் அளிக்கப்படும். இதனால், வீடு வாங்குவோருக்கு அதிக வருமான வரி சலுகை கிடைக்கும்.